குழந்தைகளின் விருப்பு வெறுப்புகள், மொழி அறிவு, சிந்தனைத் திறன், கற்றதற்கு மேல் தானே தன் அறிவை விரிவாக்குதல், பயிற்சித்திறம் ஆகியவை மழலையர் நிலையில் இருந்து பள்ளி இறுதித் தேர்வு வரையில் மிக விரைவாக வளர்கின்றன. ஆகவே தான் இந்தக் காலக் கட்டத்தில் குழந்தைகளுக்கு வாட்டப்படும் கல்வி முக்கியத்துவம் பெறுகிறது. எனினும் இந்தப் பருவத்தில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை தெரிந்து கொள்ளவும் முடியாது. ஆகவே தான் கற்பதில் ஆர்வத்தை உருவாக்குவது மிகவும் அவசியம் குழந்தைகள் மழலையர் பள்ளியில் அல்லது முதல் வகுப்பில் சேரும் முன்னரே நிறைய சொற்களைத் தம் குடும்பத்தாரிடம் இருந்தும் குடும்பத்துடன் தொடர்புடைய மற்றவர்களிடமிருந்தும் அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனிப்பதன் மூலமும் ஒருவர் பேசியதைக் கேட்டு மற்றவர் என்ன செய்கிறார், என்ன சொல்கிறார் என்பதை உற்று நோக்குவதன் மூலமும் தெரிந்து கொண்டிருப்பர்.
மேலும் தமது வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப சில விழுமங்களையும் அறிந்து இருப்பர். இந்நிலையில் பள்ளியில் சேர்ந்த போது பலதரப்பட்ட சூழலில் இருந்து வந்த மற்ற மாணவர்களையும் ஆசிரியரையும் கண்டு முதலில் தயங்கினாலும், பிறகு படிப்படியாகப் புதிய சொற்களையும் விழுமங்களையும் கற்றுக் கொள்ளும், அதன் பண்பாடும் முழு உருவத்தைப் பெறத் தொடங்கும்.
மேற்சொன்னவற்றின் அடிப்படையில் கலைத்திட்டத்தில் தரமான அறிவு வளர்ச்சிக்குத் தேவையான உத்திகளில் முக்கியமான சில பின்வருமாறு: சமுதாய யதார்த்தத்தையும் இயற்கைச் சூழலையும் முழுமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் பாடங்கள் உருவாக்கப் பட்டுக் கற்பிக்கப்படுதல்; பல வகையிலும் பெற்ற அறிவுக்கு தான் வாழும் பகுதிக்கும் இன்றைய கால கட்டத்திற்கும் பொருந்தும் வகையில் தொடர்பையும் பொருளையும் உருவாக்குமாறு கற்பித்தல் பலவிதமான பாடங்களையும் தனித்தனியே கற்பித்தாலும் அவற்றுக்குள்ள தொடர்பைப் புரிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டத்தை உருவாக்கிக் கற்பித்தல் ; நடுவுநிலைமையுடன் எதையும் ஆராயும் மனப்பாங்கை வளர்த்தல்; ஐயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் வகையிலும் தெளிவு பெறுவதற்காகக் கேள்விகள் கேட்பதை ஊக்குவிக்கும் வகையிலும் வகுப்பறைச் செயற்பாடுகள் இருக்க வேண்டும்; வகுப்பறைச் செயற்பாடுகளில் பாரபட்சம் இருக்கலாகாது. ஒவ்வொரு மாணவரும். ஆசிரியர் தனக்கு மட்டுமே கற்பிப்பது போன்ற உணர்வு பெறுமாறு கற்பிக்க வேண்டும்; கற்பனை ஆற்றலையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் வகையில் கல்வி முறை உருவாக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட வேண்டும்.
No comments:
Post a Comment