1500 ஆசிரியர் குடும்பங்களை காப்பாற்றிட தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் - ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்! - Education murasu

Latest

Thursday, November 17, 2022

1500 ஆசிரியர் குடும்பங்களை காப்பாற்றிட தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் - ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்!

 1500 ஆசிரியர் குடும்பங்களை காப்பாற்றிட தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் - ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்!

TET கட்டாயம் என தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கூறிய செயல்முறைகள் வெளிவந்த - 16/11/2012 நாளிட்ட ஆதாரம்

👇👇👇👇👇👇








குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு 2009இல் கொண்டு வந்தது. இச்சட்டம் 23.08.2010-க்குப் பிறகு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைத் தான் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வை மாநில அரசுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்திட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்ட விதி முறைகளை தமிழ்நாட்டில் அமல்படுத்தவேண்டிய முழுப்பொறுப்பும் தமிழக அரசையும், அதன் பள்ளிக் கல்வித்துறையையும் சார்ந்தது என்பதை அனைவரும் அறிவர்.தமிழ்நாட்டில் அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளிகளுக்கும், அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு, அனுமதி கொடுப்பதும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியபிறகு - அதற்கு ஒப்புதல் அளித்து அப்பணியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, ஏற்பளித்து ஊதியம் வழங்குவதும் தமிழக அரசும் அதன் கல்வித்துறையும்தான்.

23.08.2010க்குப் பின்னர், மேற்கூறிய தனியார் பள்ளிகளில் ஏற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு,தமிழக அரசின் கல்வித்துறை அனுமதி வழங்கிய போது, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டுதான் நிரப்பவேண்டும் என்றோ அல்லது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றோ கூறியதில்லை.

23.08.2010க்குப் பின்னர் அவ்வாறு நிரப்பப்பட்ட பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து அந்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க ஆணை பிறப்பித்த போதும் அந்த ஆணையில் ஒரு இடத்தில் கூட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. இந்த தவறைச் செய்தது தமிழக அரசும் அதன் பள்ளிக் கல்வித்துறையும் தான்.

பிறகு தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் தனது செயல்முறைகள் ந.க.எண்.88573/டி1/இ4/2012 நாள் 16.11.2012 அன்றுதான் தமிழகத்தில் உள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் கீழ்க்காணும் செய்தியை சுற்றறிக்கையாக அனுப்பி வைக்கிறார். (அவர் அனுப்பிய வாசகத்தை அப்படியே தருகிறோம்).எனவே ஆசிரியர் நியமனத்திற்கு உரிய கல்வி தகுதியுடன் tet தேர்ச்சி பெற வேண்டும் என்பதும் குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதால் 23.08.2010க்கு பின்னர் சிறுபான்மை மற்றும்சிறுபான்மையற்ற உதவி பெறும் பள்ளிகளுக்கு தகுதியுடைய பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி அளிக்கும் போது இதர பிற நிபந்தனைகளோடு ‘‘ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவரே நியமனம் செய்யப்படவேண்டும்’’ என்ற நிபந்தனையுடன் அனுமதி அளிக்கலாம் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.

இச்செயல்முறைகளைப் பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புதல் அளிக்குமாறு அனைத்துமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.அதாவது இரண்டு ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் கழித்துத்தான் மேற்கூறிய தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி அளிக்கும்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவரே நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

காற்றில் பறக்கவிட்ட தமிழக அரசு

23.08.2010இல் இருந்து 16.11.2012 வரையில் மேற்கூறிய தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங் களை நிரப்புவதற்கும், நிரப்பிய பிறகு அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆணைகளிலும் அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றோ அல்லது ஆசிரியர்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்றோ, கல்வித்துறை குறிப்பிடப்படவில்லை. இதன் பொருள் என்னவென்றால் 16.11.2012க்குப் பிறகு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் தான் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்றும் 16.11.2012 க்கு முன்னர் செய்யப்பட்ட நியமனங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு அவசியமில்லை என்றும் அர்த்தம். ஆசிரியர் தகுதித் தேர்வை, ஒவ்வொரு மாநில அரசும் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்திட வேண்டும் என்று மேற்கூறிய கல்வி உரிமைச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதையும் தமிழக அரசு காற்றில் பறக்கவிட்டது.

தமிழகத்தில் முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு 15.7.2012இல் தான் நடத்தப்படுகிறது.2012இல் இரண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுகளை தமிழக அரசு நடத்தியது. 2013இல் ஒரு ஆசிரியர் தேர்வு நடத்திவிட்டு, பிறகு மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தாமல் நான்காவது ஆண்டில் அதாவது 2017இல் தான் 4வது ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. 2017க்குப் பிறகு இன்று வரை தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்தாமல் ஆசிரியர்கள் எப்படி தகுதித் தேர்வில் வெற்றிபெற முடியும்?

இந்த தவறுகளை எல்லாம் அடுக்கடுக்காய் செய்துவிட்டு, அப்பாவி ஆசிரியர்களை, ஒவ்வொரு ஆண்டும்அனைவராலும் பாராட்டக்கூடிய வகையில் பள்ளி தேர்வில்தேர்ச்சி விகிதங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை - தகுதியில்லா ஆசிரியர்கள் என்று முத்திரை குத்தி அவர்களின் வேலைப் பறிப்பது எவ்வகையில் நியாயம். தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு பிரச்சனை காரணமாக வேலை இழக்கும் அபாயத்தில் சிக்கியுள்ள, அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 1500 பேரும் எந்த தவறும் செய்யவில்லை.

தமிழகத்தில் இந்த 1500 ஆசிரியர்கள் தான் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் என்றும் மற்ற அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களா? என்றால் இல்லை என்பதை அனை வரும் அறிவர். தற்போது பணிபுரியும் பல லட்சம் ஆசிரியர்களில் பெரும்பாலோர் 23.8.2010-க்கு முன்னர் பணியில் அமர்த்தப்பட்டவர்கள். அவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதைப் போன்றே 28.3.2010க்கும் 16.11.2012க்கும் இடைப்பட்ட காலத்தில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதன் மூலம் இப்பிரச்சனைக்கு எளிதில் தீர்வு காணமுடியும் என நம்புகிறோம். அதை விடுத்து இந்த 1500 ஆசிரியர்களின் வேலையைப் பறித்து அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் நடுத்தெருவில் விடுவது சரியல்ல என்று சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஏனெனில் இந்த விஷயத்தில் பல தவறுகளை அடுக்கடுக்காய்ச் செய்தது தமிழக அரசும் அதன் கல்வித் துறையும் தானே தவிர ஆசிரியர்கள் அல்ல.

பிரச்சனை தீர நியாயமான தீர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது ஆசிரியர் பணியில் சேருவதற்கு இன்றியமையாத ஒரு தகுதி என்றால், அதை எவ்வித பாகுபாடின்றி அனைத்து நிர்வாகப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும். ஆனால் அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு தகுதித் தேர்வு தேவையில்லை என்று அவர்களுக்கு விலக் களிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் அப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் தகுதி இல்லாத ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்கப்படுகிறார்கள் என்ற அர்த்தம் ஆகாதா?

23.8.2010க்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஏராளமான ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த ஆசிரியர்களை பணியில் அமர்த்து வதற்கான பணி 23.8.2010க்கு முன்னரே தொடங்கப்பட்டுவிட்டது. ஆகவே அவர்கள் 2012இல் பணியில் சேர்ந்திருந்தாலும் அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள் ளது. ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்குநர் 16.11.2012 அன்று தான், ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம் என்றும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்யக் கூடாது என்றும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஆகவே 23.8.2010க்கும் 16.11.2012க்கும் இடைப்பட்ட காலத்தில் பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று தான் நாங்கள் வேண்டுகிறோம். 

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்ததைப் போன்றே இந்த 1500 ஆசிரியர்களுக்கும் - தமிழக அரசின் கல்வித்துறை செய்த தவறுகளால் இவ்வாசிரியர்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற காரணத்தைக் காட்டி - இவர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொண்டு இப்பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டுகிறோம். மத்திய அரசின், மனித வள மேம்பாட்டுத் துறையுடன் தமிழக அரசு உடனடியாக தொடர்பு கொண்டு, இப்பணியை விரைந்து செய்து முடிக்க வேண்டுகிறோம்.

இதன் மூலம் 1500 ஆசிரியர் குடும்பங்களை காப்பாற்றிட தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டுகிறோம்

- மாயவன். நிறுவனத் தலைவர். உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.



Your download will begin in 10 seconds.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.