தமிழக மகளிர்
முன்னுரை :
மனைக்கு விளக்காகிய வாணுதல் என்பதற்கு இணங்க வீட்டின் விளக்கைப் போல விளங்குபவர் மகளிர். வீடுதோறும் செம்மை விளங்கின் நாடு தானாகவே ம்மையுறும் என்பது உலகம் கண்ட உண்மை . எனவே வீட்டின் விளக்கைப் போல விளங்கிய மகளிரின் அருமை பெருமைகளை ஆராய்வோம்
சங்ககால பெண்கள்
தமிழகம் என்பது காலங்கடந்த சொற்றொடராய்த் திகழினும், பிற்காலத் தமிழகப் பண்பாட்டிற்கும் தாயகமாய் விளங்கியது சங்ககாலப் பண்பாடு. எனவே, அக்காலத்து மகளிரின் தன்மைகளை ஆராய்வதே தகுதியுடையதாகும். பண்டைத் தமிழ் மகளிரை நினைத்த மாத்திரத்தே பெரும் படை போன்ற மகளிர் தொகுதியே மனக்கண் முன் வந்து நிற்கின்றது. அக்கூட்டத்தில் சிறப்புறத்தோன்றி முன்னிற்போருள் ஒளவையார் போன்ற பெண்பாற் புலவர் பலர். கோப்பெருந்தேவி, பூதப்பாண்டியன் மனைவி போன்ற அரசியர் சிலர், கண்ணகி, மணிமேகலை போன்ற காவியத் தலைவரும் உளர். இவர்தம் பண்புகளையெல்லாம் இச்சிறு கட்டுரையில் எடுத்தியம்புதல் இயலாது. எனவே, இங்கொருவரும் அங்கொருவருமாக வீட்டு வாழ்க்கையிலும் நாட்டு வாழ்க்கையிலும் விளங்கிய தமிழக மகளிரின் தன்மைகளைக் காண்போம்
வீட்டு வாழ்க்கை
மனையுறை மகளிர், உயிரென விளங்கிய தம் கணவரைப் பேணியும், பெண்ணின் பெருமையாய்த்தம் திண்ணிய கற்பினைக்காத்தும், மனத்தை மயக்குறும் மக்களை மாண்புற வளர்த்தும், வருந்தி வரும் விருந்தினரை ஓம்பியும், இடும்பையெனக் கருதாது குடும்பச் சுற்றத்தைத் தழுவியும், கடவுளை வணங்கியும், கவின் கலை வளர்த்துத் துன்பந் துடைத்து இன்பம் பெருக்கியும் வாழ்ந்தனர்
கணவனைப் பேணல்
கணவன் மனைவியென்ற இருவரின் தொடர்டைப் பல்வகை உவமைகளாற் கூறுவர் புலவர்
உடம்பொ டுயிரிடை யன்ன மற்றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு
என்றுரைப்பர் வள்ளுவர், இதையே - கணவனின் இன்றியமை யாமையை - மற்றோர் உவமையால் நற்றிணை குறிக்கும்
நீரின் றமையா வுலகம் போலத்
தம்மின் றமையா நந்நயந் தருளி
என்று தலைவியின் கூற்றில் திகழும் கருத்து, கணவனை இழந்த மனைவியின் வாழ்க்கை வண்டு விடுவதையும் விளக்குகின்றது
கணவனை யிழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று
இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி
என்ற சிலப்பதிகார அடிககால், செல்வம் கொழிக்கும் அரசியின் வாழ்வும் கணவனிறக்க வரண்டுவிடுவதை அறியலாம், அதே போல அறிஞர் தடுத்தும் உடன் கட்டையேறத் அணிந்த பூதப் பாண்டியன் மனைவியின் செயலும் இதனை வலியுறுத்தும்.
அறுத்து வந்த ஆருயிர்க் கணவனுக்கு அறுகவை உணவளித்து மகிழ்வது மனைவியின் முதற்கடமையாகும். தான் சமைத்ததை இனிது! இனிது எனக் கணவன் கவைத்துண்பதைக் கண்டு அம்மகள் மட்டிலா மகிழ்ச்சியடைவாள் என்பதைத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே
என்னும் குறுந்தொகைப் பாவடிகள் (167) எடுத்துக்காட்டும், இத்தகைய உண்மையன்பினாலே, வன்மை மிக்க ஆடவரையும் மென்மை மிக்க மகளிர் பிணித்துவிட்டனர்.
மக்கட் பேணல்
நம் நாட்டில் இன்று போல என்றுமே செல்வப் பெருமையும் இல்லா வறுமையும் ஒருங்கேயிருந்தன. மாடமாளிகை கூடகோபுரங்களிடையே கூரை குறைந்த குடிசைகளும் இருந்தன என்பதைச் சங்கப் பாடல்களால் அறியலாம். விதியின் சதியால் பொருட்செல்வம் குறைந்த விடத்தே மக்கட்செல்வம் நிறைந்து தோன்றும். காதல் வாழ்க்கையைக் கவின் பெறத் தொடங்கிய கண்ணகிக்கு மகப்பேறு குறிக்கப்படவில்லை. மாதவிக்கும் ஒரு தனி மகளேயாவாள் மணிமேகலையும். ஆனால், வறுமையில் வாடிய பெருஞ்சித்திரனார் மனைவியோ, மருங்கிற் கொண்ட பல்குறுமாக்களை உடையவளாய்க் காட்டப்படுகின்றாள். அம்மடந்தை உணவின்மை காரணமாகத் தன் குழந்தைக்கு இயற்கை உணவாய பால் கொடுக்க இயலாது போகவே, செயற்கை உணவாகிய சோற்றினை நாடிச் சென்ற அக்குழந்தை, உள்ளே வெற்றுக் கலனேயிருக்கக் கண்டு பசியால் அழ, அவள் அவ்வழுகையை நிறுத்த மறப்புலி கூறிப் பயப்படுத்திப் பார்த்தாள்: மதியங்காட்டி நயப்படுத்தவும் இயலாது, நின் தந்தை வந்தால் எங்ஙனம் முகத்திற் சினங் கொள்வோம் காட்டு எனக் கேட்டுப் பார்த்தாள். குழந்தையின் பசித்துன்பங்கண்டு கண்கலங்கி நிற்கும் காட்சி ஒரு புறம் (புறம் 160)
இதற்கு முற்றிலும் மாறாக மற்றொரு காட்சியும் உண்டு. செல்வக் குடியானதால் பெற்ற தாய் ஒரு புறம் வீற்றிருக்க, வளர்ப்புத் தாயான செவிலித்தாய், தேன் கலந்து பாற்சோற்றினைப் பொற்கிண்ணத்தில் வைத்துக் கொண்டு சிறுகோலோச்சி அச்சுறுத்தியும் செல்லக் குழந்தையாதலின் பசியின்றி உண்ண மறுத்துக் காற்சியம்பதிரத் தோட்டப் பந்தலின் முன்னும் பின்னுமாக ஓடியாடும் காட்சி மற்றொரு புறம் ( நற்றிணை. 110)
என்னே இவ்விரு காட்சிகளின் இரு வேறு தன்மைகள்! முன்னையது குழந்தையின் பசியைப் போக்கும் முயற்சி, பின்னையது, குழந்தைக்குப் பசியை உண்டாக்கும் முயற்சி, ஆயினும் வாழ்விலும் தாழ்விலும் தமிழகத் தாய்மார், தம் மக்கள் சான்றோர் எனக் கேட்ட போதுதான், ஈன்ற பொழுதினும் பெரிதும் மகிழ்ந்தனர்! தாய்மையின் தகைமைக்கும் முரணாகப் பிறப்பொத்த தம் மக்களுள் அறிவுடையோரையே மிகவும் போற்றினரென்பதைப்
பிறப்போ ரன்ன வுடன் வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயுமனந் திரியும்
என்ற புறநாலூற்றடிகள் (183) விளக்கும். அது மட்டுமா? இதற்கு முற்றிலும் மாறாகத் தன் மகன் சான்றோர் பழிக்கும் தியோன் என்றால், அதைக் கேட்டு வாழ்வதைவிட அவனைப் பெற்ற வயிறு பற்றியெரிய, இவ்வயிற்றுடன் வாழ்வதைக் காட்டிலும் இவ்வயிற்றையே கிழித்துப் பழி வாங்கிப் பின்னர் இறப்பேன் என முழங்கினள் தாய் ஒருத்தி என்றால், தமிழகத் தாய்மாரின் தாய்மைக் கடமையுணர்ச்சிதான் என்னே
விருந்தோம்பல்
கண்ணைக் கவரும் வண்ணப் பலகையாலும், மூக்கையீர்த்து நாக்கூறச் செய்யும் நறுமணத்தாலும், காதைத் துளைக்கும் கானப் பாட்டாலும், ஊர்க்கண் நுழைவாரை வாவென்றழைக்கும் உண்டுறை உணவு விடுதிகள் இல்லாக் காலத்தே வாணிபம் பற்றியோ வேறு வினை பற்றியோ வீடு தேடி வரும் விருந்தினர்க்கு (அக்காரணம் பற்றியே அக்காலத்தில் விருந்து என்ற சொல் புதுமை எனப் பொருள் பட்டது வயிறார உணவளித்து உடலாற உறைவிடங் கொடுத்து, உள்ளங்குளிரப் புன்முறுவல் பூத்த இன்முகங்காட்டி இனியவை கூறி விருந்தோம்பல் , வீடுதோறும் இல்லறத்தாரின் இன்றியமையாக் கடமையாய் இலங்கிற்று, வறுமையில் வாடியவருங்கூடக் குப்பைக்கீரை கொய்து உப்பில்லாமல் அட்டேனும் விருந்தோம்பினர் எனப் பழம்பாடல் கூறும் ,
இதனால், இல்வாழ்வாளின் இனிமையான கடமைகளுள்ளே விருந்தோம்பல் எத்துணைச் சிறப்புற்றது என்பதை அறியலாம். விருந்தோம்பலால் விருந்தினர்க்கேயன்றி, வீட்டாராகிய தலைவன் தலைவியர்க்கும் தனிப்பட்டதோர் அரும் பயனுண்டு. இஃது அவர் தம்முள்ளே தோன்றும் ஊடல் நீங்கிக் கூடுவதற்குத் தக்க வாய்ப்பளிக்கின்றதன்றோ! ஆகையாலேதான் ஒல்காப்புகழ்த் தொல்காப்பியனாரும் இதனை ஊடல் தீர்க்கும் வாயில்களுள் ஒன்றாகக் குறித்தார். என்னே விருந்தோம்பலின் பெருந்தன்மை
கலையறிவு
இல்லறக் கடமைகளோடு மகளிர் கலை பல கற்றுமிருந்தனர். கலையுணர்ச்சி பொருந்தத் தம்மை ஒப்பனை செய்து கொள்வர்; தம் சிறுவர் சிறுமியர்க்கும் கற்பனை நிறைந்த ஒப்பனைசெய்து மகிழ்வர், ஓவியம் தீட்டல், காவியம் புனைதல், ஆடல் பாடல் ஆகிய கலைத் துறைகளிலும் மகளிர் சிறந்து விளங்கினார் என்பதற்குச் சங்கப் பாடல்கள் சான்று பகரும். மாதவியின் ஆடல், பாடல் திறன், கலைத் திறனுக்கோர் மலைச்சிகரம் தினைப்புனங்காத்த கன்னியொருத்தி தன் இன்னிசையால் மதகரியையும் மயங்கி உயங்கச் செய்தாள் என்று அகநானூற்றுப் பாட்டொன்று கூறும். இவ்வருங்கலைகளேயன்றி, இக்காலத்தில் குடிசைக் கைத்தொழில்கள் எனப் பெரிதும் பேசப்படும் நூல் நூற்பு, ஓலை வேலை முதலியனவும் நடைபெற்றன என்பது பருத்திப் பெண்டிர், இரும்பனங்குடை என்னும் சொற்றொடர்கள் விளக்கும். நாய்மார் வீட்டுப் பொருள்கள், தோட்டப் பொருர்களான தென்னை, பனை முதலியவற்றின் இளங்காய்கள் முதலியவற்றால் சிறு தேர் முதலியன சிறார்க்குச் செய்து கொடுத்தனர்.
இயற்கையோடியைந்த இனிய வாழ்வு
பண்டைக்காலத்துத் தமிழக மகளிர், இயற்கையோடு இயைந்த இனிய வாழ்வு நடத்தினர். சிறுமியர் சிறுவரோடு ஆற்றோரங்களிலும், குளக் கரைகளிலும் நீராடியும் நீழலிருந்தும் ஆரவாரம் செய்து பாராட்டிப் புகழுமாறு சிறுவர் குளக்கரையிலுள்ள உயர்ந்த மரத்தின் உச்சியில் ஏறி நீரில் வீழ்ந்து குளத்தின் அடி வரையிற்பாய்ந்து, அடி மண் கொண்டு கரை சேர்ந்து, வெற்றி கொண்டாடி மகிழ்வர் எனத் தொடித்தலைவிழுத்தண்டினார். புறநானூற்றுப்பாட்டொன்றில் (243) எடுத்துக் காட்டுவர். இளம்பருவத்திலேயே ஆடவர் வெற்றிக்கான ஊக்கமூட்டியவர் மகளிர் என்பது இதனால் விளங்குகின்றதன்றோ! இவையன்றி ஆற்றங்கரைமணலில் பாவை விளையாட்டு, கடற்கரையில் நண்டுகளைப் பிடித்தாட்டும் அலவன் ஆட்டு, மணல் வீடு கட்டல், சிப்பி முதலியவற்றோடு விளையாடல் ஆகியவற்றிலும் மகளிர் ஈடுபடுவர். பருவ மகளிரும் காற்றோட்டமுள்ள பரண்மீதிருந்து பயிர் காத்தனர் என்பதும், முழுமதி நன்னாட்களிலும், மாலை நேரத்திலும் ஆடவரும் மகளிரும் கூடி வட்டமாய் நின்றும் கை கோத்தும் குரவைக் கூத்தாடுவர் என்பதும் அறிகிறோம். செல்வப் பெண்டிரும் மாலை நேரத்திலும், நிலாக் காலத்திலும், காற்றினையும் முழுநிலவினையும் துய்க்க நிலாமுற்றங்களிலிருந்து மகிழ்வர்
இறை வழிபாடு
இவ்வாறு இயற்கையோடியைந்து வாழ்ந்த மகளிர், இயற்கையின் உருவாகிய இறைவனையும் பல வகையால் தொழுதனர்; சிவன், திருமால், குமரவேள், புத்தர் ஆலயங்கட்குச் சென்று வழிபட்டனர்; வீட்டிலும் மாலையில் மல்லிகை மலர்ந்ததும் விளக்கினையே நெல்லும் மலருந்தூவி வழிபட்டனரென நெடுநல்வாடை என்னும் நூல் கூறும்
நாட்டு வாழ்க்கை
இவ்வாறு வீட்டு வாழ்க்கை விளக்கும் மகளிருட் சிலர் நாட்டின் நலத்திலும் நாட்டங்கொண்டு, வெளி வாழ்க்கையிலும் வெற்றி கண்டனர்
அறிவும் ஆற்றலும்
நாடு விட்டு நாடு சென்று நயம்படத் தூதுரைத்தனர் ஔவை மூதாட்டியார். வழக்கறிஞர் துணை நாடாது, மன்னனது மாபெரும் மன்றத்திலும் வழக்கைத் தானாகவே தன் திறம்படக் கூறிய கண்ணகியின் சொல்வன்மை போற்றற்குரியது. கரிகாற் சோழனும் பெருஞ்சேரலாதனும் வெண்ணிப் போரிற் பொருதபோது வளவள் எய்த வாளி, சோனது மார்பு வழிச் சென்று முதுகுப் புறத்திலும் புண் செய்து விட அம் முதுகுப் புண் இழுக்குக்குரிய புறப்புண் அன்றி விழுப்புண்ணே எனினும், புறப்புண்ணாகவே கொண்டு வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தான் சேரன். அதே சமயத்தில் பலரும் போற்றிப் புகழும் வளவன் தன் வெற்றியைக் கொண்டாடினான். வெற்றி, பகைவனின் பண்பையும் மறக்கச் செய்து வெறியாக மாறுவது உலகத்தியற்கை. அம்மாபெரும் வெற்றி முழக்கக் கூட்டத்திலும் பகைவாளப் பாராட்டும் பண்பு பெண்பாற்புலவர் ஒருவரிடத்துக் காணப்பட்டது. பெண்ணிக் குயத்தியார் எண்ணித் துணிந்து எடுத்துரைத்தார்
வென்றோய் நின்னினு நல்ல னன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் ணாணி வடக்கிருந் தோளே (புறம் 66)
என்பது அவர் பாடிய பாடல். அவ்லம்மையாரின் அறிவும் ஆற்றலும் அஞ்சாமையும், நடுவுநிலைமையும் என்னோ!
இத்தகைய கல்வித் திறனேயன்றிப் பொது அறிவும் இயற்கையிலே பெற்று விளங்கினர். தமிழக மகளிர் பொற்கிண்ணத்துத்தேன் கலந்த பாற்சோற்றை உண்ண மறுத்துச் செவிலித்தாய்க்கு ஒட்டங்காட்டிய மேற்குறிக்கப் பெற்ற செல்வப் பெண்னுங் கூடத் திருமணத்திற்குப் பிறகு எக்காரணத்தாலோ கணவனது பொருள்வளம் சுருங்கிவிடத் தந்தை கொடுத்தனுப்பிய கொழுஞ்சோற்றையும் கொள்ள விரும்பாது, தற்கொண்டான் வளத்திற்கேற்ப நாளுக்கு ஒரு வேளை உணவே உண்ணும் நிலையைக் கண்ட செவிலித்தாய் அவளது அறிவை வியந்து பாடியதாகக் காட்டும், அப்பாட்டின் பகுதி ( நற்றிணை, 110) நயத்திற்குரியது.
அவள் அறிவும் ஒழுக்கமும் எங்கே கற்றாள்? பள்ளியிலும், கல்லூரியிலும் அல்ல வாழ்க்கைப்பள்ளியில், தமிழ்ப் பண்பாட்டுப் பள்ளியில்; குடும்பக் கல்லூரியில் கற்று அறிவு பெற்ற ஒழுக்கம்
துறவும் தொண்டும்
தன்னலங்கருதாது மக்கள் நலங்கருதி மக்கள் தொண்டாற்றிய மணிமேகலை துறவுக்கும் தொண்டுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு. தனி வாழ்க்கை தானாகவே அமைந்துவிட்ட கன்னிப் பெண்டிரும் தயங்காது தொண்டாற்ற முன்வரலாம் என்பதைக் காட்டும் அவளது அரிய வாழ்வு. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று உணவுக் கொடை புரிந்தும் சிறைக்கோட்டமெல்லாம் அறக் கோட்டமாய் அருள் கொண்டும் பெருந்தொண்டாற்றிய மங்கை மணிமேகலை
முதுகுடி மகளின் வீரம்
ஆடலரைப்போல் முதுகுடி மகளிர்க்கும் மறமாகிய வீரவுணர்ச்சி உண்டு என்பதையே
"அடல்வேல் ஆடவர்க் கன்றியும் அவ்வில்
மடவரல் மகளிர்க்கும் மறம்மிகுத் தன்று"
என்ற மூதின் முல்லை இலக்கணச் செய்யுள் குறிக்கும். இவ்விலக்கணத்திற்கு இலக்கியமாய் எண்ணிறந்த பாடல்கள் புறநானூற்றில் உண்டு, கணவனும் தமையனும் களத்தில் இறக்க மைந்தனைப் போர்க்கோலம் புளைவித்துப் போருக்கு அனுப்பிய தாயின் வீரமும் புறம் 179) நரை மூதாட்டி தன் முதுமைப்பருவத்து அருமையாய் பெற்ற ஒரு தனி மகனும்
போரிலிறக்க வருந்தாது, ஈன்ற ஞான்றினும் பெரிதும் மகிழ்ந்த தாயின் வீரமும் புறம் 277) இப்பாடல்களிற் பொலிந்து தோன்றும்
முடிவுரை
இவ்வாறு வீட்டிலும் நாட்டிலும் புகழுடன் பொலியும் மகளிர் தமக்கு மனைவியராய் வாய்ப்பதையே பெரும் பேறாகக் கருதினர் ஆடவர் என்னும் கருத்து, குறுந்தொகைப் பாட்டொன்றில் (14) சிறந்து விளங்கும். தலைவன் ஒருவன் தன்னூர்ப் பெருந்தெருவில் செல்லும் போதெல்லாம் பலரும் அவனைச்சுட்டிக்காட்டி, நம்மூர் நல்லாள் இன்னாளின் கணவன் இதோ செல்கிறான், எனக் கூறுவது, சற்று நாணத்தைத் தருவதென்றாலும், அதனையே பெரும் பேறாகக் கருதினனாம். இந்த அளவுக்குத் தமிழக மகளிர் தம் கணவன்மாருக்குப் பெருமை தேடித்தந்தனர்.
வாழ்ந்தோங்குக தமிழக மகளிரின் தனிப் பெரும் பண்பாடு.
-----------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.