கல்வெட்டுகள்
முன்னுரை
வடவேங்கடம் தென் குமரிக்கு இடைப்பட்ட நம் தமிழகமானது பெரியனவும் சிறியளவும் ஆகிய திருக்கோயில்கள் பலவற்றைத் தன்னகத்துக் கொண்டு விளங்குவதை யாவரும் அறிவர். நம் நாட்டில் அத்துணைக் கோயில்கள் இருப்பதற்குக் காரணம், பண்டைத் தமிழ் வேந்தர்களும், குறுநில மன்னர்களும் அரசாங்கப்பணி புரிந்த அரசியல் தலைவர்களும், சமயப்பற்றுடையவர்களாய்த் திகழ்ந்த தமிழ் நாட்டுச் செல்வர்களும், பிற அன்பர்களும் தமக்குத் தொடர்புடைய நகரங்களிலும் ஊர்களிலும் தம் வழிபடு கடவுளர்க்குத் திருக்கோயில்கள் அமைத்து விழா நிகழ்த்தத்தொடங்கியமையே யாகும். அக்கோயில்கள் எல்லாம் நம் முன்னோருடைய சமயப் பற்றையும் பெருமையையும் நம்பினோர்க்கு அறிவுறுத்தும் நினைவுச் சின்னங்களாகவும், வானளாவ உயர்ந்து காண்போர் கண்களைக் கவரும் பெருமித முடையனவாகவும் இக்காலத்தும் நின்று நிலவுதல் காணலாம்
சிலாசாசனங்கள்
கோயில்களின் உள்ளே சென்று, கருப்ப இல்லில் எழுந்தருளியுள்ள இறைவனை வணங்கி, அக்கருப்ப இல்லைச் சூழ்ந்துள்ள பிரகாரத்தைச் சுற்றிவரும் போது கருங்கற் சுவர்களின் மேல் வரிசை வரிசையாக எழுத்துகள் வரையப்பட்டிருத்தலைப் பார்க்கலாம் அவ்வெழுத்துகள் சிற்றுளி கொண்டு கல்தச்சர்களால் பொறிக்கப்பட்டனவாகும். அவைகளே கல்வெட்டுகள் எனவும் சிலாசாசனங்கள் எனவும் றப்படுகின்றன. அவற்றைப் பார்த்தவர்கள் எழுத்துகள் தமக்கு விளங்காமையால், அவைகளெல்லாம் தேவர்கள் தம் தெய்வ மொழியில் முற்காலத்தில் வரைந்து வைத்தவையாதல் வேண்டும் என்று சொல்லி வந்தனர். )
அத்தகைய நிலையில் நாம் இருந்த காலத்தில் அக்கல்வெட்டுகள் நம் தாய்மொழியாகிய தமிழில் எழுதப் பெற்றவைகளே என்பதை நன்குணர்ந்து நமக்கு அறிவுறுத்தியவர்கள் மேல் நாட்டுப் பேரறிஞர்களேயாவர். அவர்களுள் ராபர்ட் சிவெல், டாக்டர் கீலஹார்ன். டாக்டர் பர்னல், டாக்டர் பூலர், டாக்டர் ஷிட்ஷ் முதலானோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர். அவர்களுடைய ஊக்கமும், உழைப்பும் இல்லையேல் அவைகள் காலப்போக்கில் அழிந்து பயன்படாமல் போயிருக்கும் என்பது திண்ணம். இந்திய அரசாங்கத்தினரும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கல்வெட்டிலாகாவும் புதைபொருள் ஆராய்ச்சி இலாகாவும் நிறுவித் தக்க அறிஞர்களைக் கொண்டு கோயில்களிலுள்ள கல்வெட்டுகளைப் படி எடுப்பித்தும், புதைபொருள் ஆராய்ச்சி செய்வித்தும் அவற்றால் அறியக் கிடக்கும் பழைய வரலாறுகளை ஆராய்ந்து வெளியிடுமாறு செய்தனர். அவற்றின் பயனாகப் பல நூற்றாண்டுகளாக நாம் அறிந்து கொள்ள முடியாத நிலையில் மறைந்து கிடந்த நம் தமிழக வரலாறு சிறிது சிறிதாக வெளிவரத் தொடங்கியது. அன்னியர் ஆட்சியினால் நம் நாட்டில் பல தீமைகள் ஏற்பட்டவை உண்மையெனினும், அதனால் சில நன்மைகளும் கிடைத்துள்ளமையை நாம் எளிதில் மறந்துவிடமுடியாது. அத்தகைய நன்மைகளுள் நமது பழைய வரலாற்றை நாம் அறிந்து கொள்ளுமாறு அரசாங்கத்தினர் கல்வெட்டிலாகா மூலம் செய்து வந்த அருஞ்செயல்கள் நம்மனோரால் பெரிதும் பாராட்டற்குரியனவாகும்.
கல்வெட்டுகள் தோன்றிய விதம்
இனி கல்வெட்டுகள் நம் நாட்டில் முதலில் எங்கனம் தோன்றின என்பதை ஆராய்ந்து காண்போம். பகைவர் முன்னின்று ஆற்றலோடு போர்புரிந்து உயிர் துறந்த வீரர்களை நினைவு கூர்தற் பொருட்டு அவர்கள் இறந்த இடங்களிலாதல் அல்லது வேறு தொடர்புடைய உங்களிலாதல் நடுகல் ஒன்றமைத்து விழா நடத்திப் பாராட்டுதல், முற்காலத்தில் தமிழ் மக்கள் கைக் கொண்டிருந்த ஒரு பழைய வழக்கமாகும். இவ்வுண்மையைப் பழைய தமிழ் நூலாகிய தொல்காப்பியத்திலுள்ள,
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்
றிருமூன்று வரையிற் கல்லொடு புணர
-வெட்சித்திணை - 5
என்னும் சூத்திரப்பகுதியினால் நன்குணரலாம். அந்நடுகல்லின் மேல் போர்க்களத்தில் இறந்த வீரனின் பெயரும் பெருமையும் வரையப்படும் வழக்கம் பண்டைக் காலத்தில் இருந்தது என்பது கடைச்சங்கப் புலவர்களின் பாடல்களால் புலப்படுகின்றது. அதனை,
நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி யதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
என்னும் அகநானூற்றுப் பாடலும்,
அணிமயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித்
தினிநட் டனரே கல்லும்
என்னும் புறநானூற்றுப் பாடலும்
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட
நல்லேசு கவலை பெண்ணுமிகப் பலவே." - வரிகள் 387-389
என்னும் மலைபடுகடாம் அடிகளும் தெள்ளிதின் உணர்த்துதல் காணலாம், அந்நூல்களை நணுகி ஆராயுமிடத்துப் பகைவர் முன்னின்று அஞ்சாமல் போர்புரிந்து புகழுடன் இறந்த வீரர்களின் நடுகற்களின் மேல் பொறிக்கப்பட்ட அவர்களுடைய பெயரும் பிடுமே நம் நாட்டில் முதலில் தோன்றிய தமிழ்க் கல்வெட்டுகள் என்பது ஐயமின்றித் துணியப்படும்
கிபி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நிலவிய பேரரசரும் சைவசமயக் குரவராகிய சுந்தரமூர்த்திகளின் அரிய நண்பரும் ஆகிய சேரமான் பெருமாள் நாயனார் தாம் இயற்றியுள்ள திருவாரூர் மும்மணிக் கோவையில்
பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி
நட்ட கல்லும் மூதூர் நத்தமும்
- திருவாரூர் மும்மணி - 15
என்றுகூறியிருத்தலால் கடைச்சங்கநாளிலிருந்த அவ்வழக்கம் அச்சங்ககாலத்திற்குப் பின்னரும் தொடர்ந்து வந்துள்ளது என்பது நன்கு புலனாகிறது, அக்காலப் பகுதியில் நம் தமிழ் நாட்டில் சமண முனிவர்கள் தங்கி ஆங்காங்குச் சங்கங்கள் அமைத்துத் தம் சமயத்தையாண்டும் பரப்பி வந்த செய்தி வரலாற்றறிஞர் பலரும் அறிந்ததொன்றாம். அம்முனிவர்கள் உண்ணா நோன்பியற்றி உயிர்நீத்த இடங்களில் அவர்கள் பால் அன்பு பூண்டொழுகிய அரசியல் தலைவர்களும் மாணவர்களும் அன்னாரின் பெயர்களையும் அருஞ்செயல்களையும் பொறித்துவைத்திருக்கின்றனர். அத்தகைய கல்வெட்டுகளை மலைப்பாறைகளிலும் குன்றுகளிலும் குகைகளிலும் பார்க்கலாம். செஞ்சிக்கடுத்த திருநாதர் குன்றிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆனை மலையிலும் திருச்சிராப்பள்ளிக் குன்றிலும் அக்கல்வெட்டுகள் இக்காலத்தும் காணப்படுகின்றன. எனவே, நம் தமிழகத்தில் பண்டைய நாள்களில் அருஞ்செயல்புரிந்து இறந்து பட்ட போர் வீரர்களின் பெயரையும் ஆற்றலையும் உணர்த்தும் முறையில் நடுகற்களின் மேல் முதலில் தோன்றிய தமிழ்க் கல்வெட்டுகள், பிறகு சமணமுனிவர்களின் சமாதிகளிலும் கருங்கற்படுக்கைகளிலும் பொறிக்கப்பட்டு, அதன் பின்னர் அரசர்களும் பிறரும், எடுப்பித்த கருங்கற்கோயில்கள் பலவற்றிலும் வரையப்பட்டன என்பது தெள்ளியது. இனி கோயில்களில் கல்வெட்டுகளைப் பொறிக்கத் தொடங்கியமைக்குக் காரணம் யாது என்பதை ஆராய்வோம்
கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு முடிய நம் தமிழ் நாட்டில் ஆட்சி புரிந்த பல்லவ அரசர்கள் முதலில் கருங்கற் கோயில்கள் அமைத்தனர். அவர்களுக்குப் பிறகு, அரசாண்ட சோழ மன்னர்கள் சைவ சமயத்தில் பெரிதும் ஈடுபாடுடையவர்களாயிருந்தமையால் தமிழகத்தில் யாண்டும் கருங்கற் கோயில்கள் எடுப்பித்துப் பெரும் புகழ் எய்தினார்கள். அங்ஙனம் பாண்டிவேந்தர்களும் தம் ஆட்சிக்குப்பட்டிருந்த நாடுகளில் கருங்கற்கோயில்கள் பலவற்றை அமைத்தார்கள் பேரரசர்களின் செயலைப் பின்பற்றிக் குறுநில மன்னர்களும் அரசியல் தலைவர்களும் தமக்குத் தொடர்புடைய ஊர்களில் பல கோயில்கள் கட்டினார்கள். அக்கோயில்கள் எல்லாவற்றிலும் நாள் வழிபாடும் திங்கள் விழாக்களும் ஆண்டு விழாக்களும் சிறப்பாக நடைபெற்றுவரும்பொருட்டு அவற்றை எடுப்பித்த பெரு வேந்தர்களும் சிற்றரசர்களும் பெரும் பொருளும் நிலங்களும் வழங்கினர். அவர்களைப் போல் சமயப்பற்றுடைய பிற அன்பர்களும் கோயில்களுக்கு நிவந்தங்கள் அளித்துப் பலவகைப்பட்ட அறங்கள் புரிய முன் வந்தனர். அவர்கள் எல்லோரும் தாம்கோயில்களுக்கு நிவந்தமாக அளித்தவற்றை விளக்கமாக அவ்வக் கோவில்களின் கருங்கற் சுவர்களில் வரைந்து வைப்பாராயினர் சில சமயங்களில் அவற்றின் படியொன்றைச் செப்பேடுகளில் பொறித்து உரிய கோயிலுக்குக் கொடுப்பதும் உண்டு. அவர்கள் அவ்வாறு செய்து வந்தமைக்குக் காரணம் அவ்வறங்கள் இடையில் நின்றுபோகாமல் எக்காலத்திலும் நன்கு நடைபெற்று வருதல் வேண்டும் என்ற ஆர்வமேயாம். அன்றியும் அவை கோயில்களுக்குரிய தக்க ஆதாரமாக அமைந்து என்றும் பயன்பட வேண்டும் என்பதுமாம்.
கோயில்களுக்கு விடப்பட்டுள்ள நிவந்தங்களைப் பலரும் உணர்ந்து அங்கு நடைபெற வேண்டிய நாள் வழிபாடு, திங்கள் விழா, ஆண்டு விழா முதலான எல்லாம் முறைப்படி தவறாமல் நிறைவேறி வருகின்றனவா என்று ஆராய்வதற்குப் பயன்படுமாறு பொதுமக்கள் எல்லாரும் பார்க்கக் கூடிய புறச் சுவர்களின் மேல் கல்வெட்டுகள் வரையப்பட்டுள்ளமை அறியத்தக்கதாகும். அக்காலத்தில் கோயில்களுக்குத் திருப்பணிபுரிய விரும்பும் அன்பர்கள் முதலில் அரசாங்கத்தினாரிடம் உத்தரவு பெற்று அக்கோயில்களிலுள்ள கல்வெட்டுகள் எல்லாவற்றையும் படி எடுத்து வைத்துக்கொண்டு, திருப்பணி முடிவெய்திய பின்னர், அரசியல் அதிகாரிகள் பார்த்துக் குறிப்பிட்ட இடங்களில் அவற்றை மீண்டும் எழுதவித்தல் வேண்டும். இது பண்டைத் தமிழ் வேந்தர்களது ஆணையாகும், இதனால் வேட்டுகள் கோயில்களுக்கு எத்துணை இன்றியமையா ஆதாரங்களாக அரச்களால் கப்பட்டு அந்நாளில் பாதுகாக்கப்பட்டு வந்தன என்பது தெள்ளிதிற் புலனாதல் காண்க
இனி, கோயில்களில் நாள்தோறும் நிகழ்தற்குரிய வழிபாடுகளும், விழாக் காலங்களில் நடைபெற வேண்டிய சிறப்பு நிகழ்ச்சிகளும், பகலும், இரவும் இடையீடின்றி எரிக்கப்படும் நந்தாவிளக்குகளும், அங்குப் பணிபுரியும் தேவகன்மிகளின் கடமைகளும், அங்குள்ள ககலன்கள், வெள்ளிக் கலங்கள், செப்புக்கலங்கள் முதலியவற்றின் பெயர்கள் க்தின் எடைசளும், கோயில், கோபுரம், மண்டபம், திருச்சுற்று மாளிகை, படிமம் முதலியவற்றின் பெயர்களும், அவற்றின் அமைத்தோர் பெயர்களும் கல்வெட்டுகளில் விளக்கமாகக் குறிக்கப்பட்டிருத்தல் காணலாம்
இங்ஙளம் கோயில்களுக்குத் தொடர்புடைய செய்திகள் பலவற்றை யுணர்த்தும் கல்வெட்டுகளேயல்லாமல் வேறு செய்திகளைக் கூறும் கல்வெட்டுகளும் கோயில்களில் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அரசர்கள் ஊர்ச் சபைகளுக்கும் கோயில்களுக்கும் அனுப்பிய திருமுகங்களும், அரசாங்க அறிக்கைகளும், குறுநில மன்னர்கள் தமக்குள் செய்து கொண்ட உடன்படிக்கைகளும், அரசர்கள் பொது மக்களுள் சில வகுப்பினருக்கு வழங்கிய உரிமைப் பத்திரங்களும், கிராம சபைகள் அமைத்தற்குரிய விதிகளும், அதில் உறுப்பினராதற்குரியவர்களின் தகுதியும் அன்னோரின் கடமையும், அச்சபையார் செய்த சில குறிப்பிடத்தக்க முடிபுகளும், அரசர்கள் அரசியல் அதிகாரிகள் முதலானோரின் வீரச் செயல்களையுணர்த்தும் பாடல்களும், அரசியல் தலைவர்களுக்கும் புலவர்களுக்கும் மருத்துவர்கட்கும் கல்லூரி கட்கும் நூல் நிலையங்கட்கும் அரசர்களும் பிறரும் வழங்கிய இறையிலி நிலங்களும் வரையப்பட்டிருக்கின்றன. அவற்றால் பண்டைத் தமிழ் வேந்தர்களின் அரசியல் முறைகளும், கிராம ஆட்சியும் சமுதாய வாழ்க்கையும், சமய நிலையும் நாகரிகமும் கல்வி, கைத்தொழில், வாணிகம் முதலியனவும் அந்நாளில் எவ்வாறு இருந்தன என்பதை நன்கறியலாம்
பொதுவாகக் கல்வெட்டுகளை நோக்கின் முதலில் ஸ்வஸ்திஸ்ரீ என்ற மங்கல வாசகமும், பிறகு அக்கல் வெட்டுத் தோன்றிய காலக்குறிப்பும், பின்னர் கல்வெட்டுச் செய்திகளும், அதன் பின்னர் அதற்குத் தொடர்புடையவர்களின் கையெழுத்துகளும், இறுதியில் இது பன்மாகேஸ்வர ரக்ஷை இது ஸ்ரீ வைஷ்ணவரக்ஷை இவ்வறங்காந்தார் திருவடி என் தலை மேலன அறமறவற்க - அறமல்லது துணையில்லை என்ற ஒப்படைக்கிளவிகள் ஒன்றாயினும் சிலவாயினும் காணப்படும். சில கல்வெட்டுகளில் ஓம்படைக்கிளவியோடு அவ்வறத்தைச் சிதைத்தார் அச் செயலால் அடையும் பழி பாவங்களும் சேர்த்து வரையப்பட்டுள்ளன. அவை இது இறக்குவான் கங்கையிடை குமரியிடை எழுநூற்றுக்காதமும் செய்தார் செய்த பாவமும் எய்துவான் இதற்குத் தீங்கு வேண்டுவான் வழி அறுக; இது விலக்குவான் கங்கையிடை குமரியிடை எழு நூற்றுக்காதமும் செய்தார் செய்த பாவமும் எய்துவான் இதற்குத் தீங்கு வேண்டுவான் வழி அறுக; இது விலக்குவாள், கங்கையிடை குமரியிடை குராற் பசு கொன்றான் செய்த பாவங் கொள்வான் என்பனவும் பிறவுமாம்.
கல்வெட்டுகளில் காணப்படும் காலக்குறிப்புகள் எல்லாம் அந்நாட்டு வேந்தாது ஆட்சியாண்டேயாகும். சில கல்வெட்டுகளில் அரசனது ஆட்சியாண்டோடு சகாப்தமும் கலியப்தமும் கொல்லம் ஆண்டும் குறிக்கப்பட்டுள்ளன. அரசனது ஆட்சியாண்டிற்கு முன் அவனுடைய வீரச்செயலும் சிறப்புப் பெயரும் இயற் பெயரும் பொறிக்கப்படுவது பழைய வழக்கம். அதோடு இல்லாமல் மெய்க்கீர்த்தி அமைத்து ஆட்சியாண்டு வரும் முறை முதல் இராராசசோழனால் கிபி 893 -ம் ஆண்டில் முதலில் தொடங்கப்பட்டது. அவனைப் பின்பற்றி மற்ற அரசர்களும் மெய்க்கீர்த்தி அமைத்துக் கல்வெட்டுகள் வரையத் தொடங்கினர் அரசனுடைய ஆட்சியாண்டு ஏறாற மெய்க்கீர்த்தியும் புதிய புதிய செய்திகளோடு வளர்ந்து கொண்டே போகும். அதன் துணைக் கொண்டு ஒவ்வொருவேந்தருடைய ஆட்சியிலும் எவ்வெவ்வாண்டில் எந்த எந்த நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன என்பதை ஆராய்ந்து அறிந்து கொ லாம். ஆகவே மெய்க்கீர்த்திகளோடு அமைந்த கல்வெட்டுகள் எல்லாம் வரலாற்று ஆராய்ச்சிக்கு சிறந்த ஆதாரங்களாக இருத்தல் உணரற்பாலதாகும்
நம்நாட்டு வரலாற்று ஆராய்ச்சிக்கு இன்றியமையாதனவாக உள்ள கல்வெட்டுகள் எல்லாம் படியெடுத்து அச்சிடப்பெற்று வெளிவரின், உண்மையான பல பல வரலாறுகளை நாம் அறிந்து மகிழலாம் என்பது திண்ணம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.